சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.
இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.
பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.
பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.